கள்ளக்குறிச்சியில் பெரும்பாலான விவசாயிகள், கரும்பு, பருத்தி, மக்கா, மஞ்சள், வெங்காயம் போன்ற பயிர்களை அதிகம் விளைவிப்பார்கள். சில விவசாயிகள் ஊடு பயிர்களையும் நட்டுவைத்து நல்ல விளைச்சலைப் பெறுவார்கள். இந்தச் சூழ்நிலையில், தோட்டக்கலைத் துறை உதவியுடன் வெங்காய விளைச்சலில் ஈடுபட்ட நல்ல வருமானத்தை ஈட்டியிருக்கின்றனர் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஜோஸ்பின் மேரி ஆரோக்கியதாஸ் தம்பதியினர்.
முதலில், தங்களது இரண்டு ஏக்கர் நிலத்தில் வெங்காயத்தினை விதையாக வாங்கி நடவு செய்துள்ளனர். ஆனால், அது அவர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரவில்லை. மாறாக அதிக செலவுகளை கொடுத்துள்ளது.
ஆகையால், தோட்டக்கலைத் துறையிடமிருந்து இவர்கள், வெங்காய நாற்றினை வாங்கி 45 நாட்கள் வளரச்செய்து பின்னர் அதனை நிலத்தில் நடவு செய்துள்ளனர். இது நல்ல பலனை கொடுத்துள்ளதாக ஆரோக்கியதாஸ், ஜோஸ்பின் மேரி தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ வெங்காய விதை 40 முதல் 50 ரூபாய் வரை இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் நடவு செய்வதற்கு ஆயிரத்து 500 கிலோ தேவைப்படும். இதனால், 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை தங்களுக்குச் செலவாகும் எனக்கூறும் ஆரோக்கியதாஸ், தோட்டக்கலையிடம் நாற்றினை பெற்று சொட்டுநீர் பாசனம் மூலம் செய்யப்படும் வெங்காய சாகுபடியில் நல்ல வருமானம் வருவதாக கூறுகிறார்.