கள்ளக்குறிச்சி:உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் அதிமுகவின் முன்னாள் திருநாவலூர் ஒன்றியச் செயலாளர் ராஜா என்பவர் பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சந்தேகத்திற்கிடமான உயிரிழப்பு குறித்து நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும்; காலம் கடந்து நீதி அநீதிக்குச் சமம் என்ற தலைப்பிலும் இந்தச் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
மு.க. ஸ்டாலினிடம் நியாயம் கேட்டு சுவரொட்டி
- 2016 செப்டம்பர் 22ஆம் தேதி போயஸ் தோட்டத்தில் நடந்தது என்ன, எதற்காக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தன்று கார் ஓட்டுநர், பாதுகாவலர், ஐபிஎஸ், ஐஏஎஸ் அலுவலர்கள் என போயஸ் தோட்டத்தில் இருந்த பலரும் எங்கே சென்றார்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
- ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது நினைவிடத்தில் தியானம் செய்த ஓ. பன்னீர்செல்வம் பின்பு எடப்பாடி பழனிசாமி அரசில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்ட பின்பு மௌனத்தைக் கலைத்தது ஏன் என்பது போன்ற கேள்விகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- ஜெயலலிதாவின் சந்தேக மரணத்தில் உண்மை நிலையை அறிய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் என்ன ஆயிற்று என்றும் அந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த விவகாரத்தில் உரிய விசாரணை செய்யப்பட்டு அதன் உண்மை நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவர தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுவரொட்டி வழியாக அதிமுக முன்னாள் திருநாவலூர் ஒன்றியச் செயலாளர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.