கள்ளக்குறிச்சி: நாங்கள் இருவரும் விருப்பத்துடன்தான் திருமண பந்தத்தில் இணைந்தோம் என சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு நமக்களித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட கள்ளக்குறிச்சி தனித் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு நமக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் இருவரும் 4 மாத காலமாக காதலித்து வந்தோம். செளந்தர்யா குடும்பத்தினருடன் எனக்கு 10 வருட காலமாக பழக்கம் உண்டு.
இவரை நான் கடத்தி வந்து தாலி கட்டவில்லை. செளந்தர்யா தந்தையிடம் எங்கள் காதல் குறித்து பேசினோம். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. என் வீட்டில் உள்ள அனைவரும் இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். எனவே, திருமணம் குறித்து செளந்தர்யாவிடம் பேசினேன். அவரும், என்னை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் என் பெற்றோர், உறவினர்கள் சூழ செளந்தர்யாவை கரம் பிடித்தேன்” என்று கூறினார்.
சாதிமறுப்புத் திருமணம் செய்த எம்.எல்.ஏ பிரபு பேட்டி மேலும், பிள்ளைகளின் விருப்பங்களை பெற்றோர் நிறைவேற்றி வைக்கவேண்டும் என காதலிக்கும் பெண்களின் பெற்றோருக்கு அறிவுரையையும் அவர் வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி தனித் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு (34), தியாகதுருகத்தைச் சேர்ந்த மலையம்மன் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர் சுவாமிநாதன் - மாலா தம்பதி மகள் சௌந்தர்யாவை (20) கடத்திச் சென்றதாக பெண்ணின் தந்தை சுவாமிநாதன் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.
இச்சூழலில் பிரபு இன்று (அக். 5) அதிகாலை 5.40 மணியளவில் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்து கொண்டதையடுத்து, இவர்களின் திருமணப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இதையறிந்த சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன், பிரபுவின் வீட்டிற்குச் சென்று துரோகம் செய்துவிட்டாய் என்று நியாயம் கேட்டு கதறி அழுது தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதையறிந்த தியாகதுருகம் காவல் துறையினர், அவரை பாதுகாப்பாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சாதி மறுப்பு திருமணம்