கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில் கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா, கரியாலூர் தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் ரவிக்குமார், காவல்துறையினர் மேல்வாழப்பாடி, மல்லிகைப்பாடி, முண்டியூர் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது வாழப்பாடி ஓடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,600 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து, சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். இதைப்போல மல்லிகைப்பாடி கிராமத்தில் உள்ள ஓடையில் ஐந்து பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர்.