மக்கள் நீதி மையம் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சி தனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடு்ம் வேட்பாளர் அய்யாசாமியை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் நேற்று (மார்ச்.29) கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்," தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் 50 ஆண்டு காலமாக மாறி மாறி ஆண்டார்கள். அவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்லது செய்த காங்கிரஸ்ஸை 20 ஆண்டுகள் ஆட்சியிலிருந்து வீட்டுக்கு அனுப்பினீர்கள். ஆனால், தற்போது நாம் சொல்ல வேண்டாம், அவர்களே சொல்கின்றனர் ஆண்ட கட்சி ஆளுகின்ற கட்சியைப் பார்த்து அனைத்திலும் ஊழல் என்கிறது.
ஆளும் கட்சி ஆட்சியைப் பார்த்து சர்க்காரியா கமிஷன் ஊழல் என்று கூறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இரண்டு கட்சிகளும் பங்காளிகள். ஒருவரை ஒருவர் சாடிக் கொள்கின்றனர். ஊழல் என்று சொல்கின்ற இந்தக் கட்சிகள் இருக்க வேண்டுமா, தொடர வேண்டுமா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
இவர்கள் நன்றாக ஆட்சி செய்திருந்தார்கள் என்றால் மக்களின் வாழ்வாதாரம் எந்த அளவிற்கு உயர்ந்து இருக்க வேண்டும். பொதுமக்கள் இலவசங்களை எதிர்பார்த்து கடந்த ஐம்பது ஆண்டுகளை வீணாக்கி விட்டீர்கள். பொதுமக்களின் வரி முறையாக திருப்பி செலவு செய்யப்பட்டிருந்தால், ஒவ்வொருவரின் தனிமனித வருமானமும் இன்று உயர்ந்திருக்கும்.
பொதுமக்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமும் இலவசங்களை எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இருக்காது. பொதுமக்களாகிய நீங்கள் தொடர்ந்து இலவசங்களை எதிர்பார்ப்பதன் மூலமாக நீங்கள் சரியாகப் படவில்லை என்பதும், உங்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை என்பதும் புரிகிறது.