கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தில் மாவட்டப் பெருந்திட்ட வளாகம் அமைக்க கடந்த 23ஆம் தேதி முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இதனை எதிர்த்து ஆன்மிகவாதிகளும் இந்து முன்னணி போன்ற அமைப்புகளும் குரல் எழுப்பி வந்தனர். அதன் ஒருபகுதியாக கள்ளக்குறிச்சியிலுள்ள கச்சேரி சாலையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், வளாகம் அமைக்க முயற்சி செய்யும் அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், ”இதுவரை இந்து முன்னணி சார்பில் சுமார் 50 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டு, இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிலத்தை அரசு வளாகங்கள் அமைக்க இந்து அறநிலையத் துறை முயற்சி செய்துவருகிறது. அந்த வகையில் தற்போது வீரசோழபுரத்திலுள்ள கோயில் நிலத்தில் மாவட்டப் பெருந்திட்ட வளாகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான போக்காகும்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி ஆகவே கோயில்களை விட்டு இந்து அறநிலையத் துறை உடனடியாக வெளியேற வேண்டும். இஸ்லாமியர்களுக்கென்று தனியாக வக்பு வாரியம் இருப்பது போல் இந்துக்களுக்கும் தனி வாரியம் அமைக்க வேண்டும். உயர் நீதிமன்றம் கூறியது போல் கோயில் நிலம் கோயிலின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:'இந்துக்கள், இந்து கடைகளிலேயே பொருட்கள் வாங்குவோம்' - இந்து முன்னணி போஸ்டரால் சர்ச்சை