கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது.
கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கல்வராயன் மலையில் பெய்த தொடர் கனமழை காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து கோமுகி அணைக்கு 1,300 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையானது தனது முழுக் கொள்ளளவை ஏற்கனவே எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் 1,300 கன அடி நீரும் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோமுகி அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! வெள்ள அபாய எச்சரிக்கை!
கோமுகி அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோமுகி அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கள்ளக்குறிச்சியில் உள்ள ஏரி, குளங்கள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கல்வராயன்மலை பகுதியில் மழை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கல்வராயன் மலையிலிருந்து கோமுகி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கினால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..கும்மிடிப்பூண்டியில் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது!