கள்ளக்குறிச்சி:கிருஷ்ணா நகரில் இணையதளம் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்கிற்குத் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்படி கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சூதாட்டம் நடைபெற்ற வீட்டை சுற்றி வளைத்தனர்.
பின்பு உள்ளே சென்று பார்த்தபோது கணினி வைத்து சிலர் இணையதளத்தில் (One X Bet App) பந்தயம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை கைது செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.
விசாரணையில், க.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தலைமையில் வீடு வாடகைக்கு எடுத்து இணையதளம் மூலம் பெட்டிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, கோகுல்நாத், மணிவேல், அரவிந்த், பிரகாஷ், மணிகண்டன், பாலாஜி ஆகிய ஒன்பது பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இணையதள சூதாட்டம்
இந்நிலையில், இணையதள சூதாட்டத்திற்காக பயன்படுத்திய சுமார் 30 செல்ஃபோன்கள், 400 சிம்கார்டுகள், விலை உயர்ந்த கார், இருசக்கர வாகனங்கள், விலை உயர்ந்த கணினி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள், சுமார் 20 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.