டெல்லி: இதுகுறித்து கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கெளதம சிகாமணி நாடாளுமன்றத்தில் வைத்த கோரிக்கையாவது,’உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஜனவரி முதல் சரியத் தொடங்கியிருக்கிறது. அதுவும் இப்போது ஜூன் 22-ல் 116 டாலராக இருந்தது, தற்போது டிசம்பர் 22-ல் 75 டாலராக குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 35 சதவீதம் சரிவாகியுள்ளது. ஆனால் எரிபொருளின் விலை ஏற்றத்திலேயே உள்ளது.
பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இதனால் மக்களுக்கு பயனும் சென்று அடையவில்லை. முந்தைய UPA (United Progressive Alliance) ஆட்சியில் கச்சா எண்ணைய் விலை ஒரு பீப்பாய் 111 டாலராக இருந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 71 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய் 57ஆகவும் இருந்தது. இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 86.91 ரூபாயாகவும் இருக்கும்பொழுது, தற்பொழுது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 111, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய் 81ஆகவும் இருக்கின்றது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், வேலைவாய்ப்பின்மை மற்றும் பண வீக்கத்தால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இதன் பயனெல்லாம் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதுதான் இந்த அரசின் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆனால், கச்சா எண்ணெய் விலை இவ்வளவு குறைந்த பிறகும் அரசாங்கமும், நிறுவனங்களும் எரிபொருளின் விலையைக் குறைக்கவில்லை.