கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த உரக்கடை நடத்தி வரும் பொன்னுரங்கன், கோமலவள்ளி தம்பதிக்கு விஜயகுமார் (வயது 53), சுதானந்தம் (வயது 40) ஆகிய 2 மகன்களும், பிரசன்னா (வயது 50), பிரகாசவாணி (வயது 47), திராவியம் (வயது 42) என 3 மகள்களும் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணமான நிலையில் பிரகாசவாணி கணவருடன் சேர்ந்து வாழாமல் பெற்றோருடன் வசித்து வந்து உள்ளார். இந்த நிலையில் திராவியம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை வீரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படும் திராவியத்திற்கு ரியாஷினி என்ற 5 வயது மகள் உள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது குழந்தையாக விஜயகுமாரி என்ற பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த திராவியம் கடந்த 3 ஆண்டுகளாக கிளாப்பாளையம் கிராமத்தில் உள்ள கணவரின் வீட்டுக்குச் செல்லாமல் தனது தாய் வீட்டிலேயே குழந்தைகளுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதனால் திராவியத்தின் கணவர் மதுரைவீரன் அடிக்கடி நத்தாமூர் கிராமத்திற்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திராவியம் நேற்று (செப். 29) மதியம் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேசியதாக கூறப்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டவர் புத்தி பேதலித்து உளறுவதாக கருதி அவரது குடும்பத்தினர் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரவு உணவு முடிந்த பின் வீட்டில் உள்ள அனைவரும் அவரவர் அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென கண் விழித்து எழுந்த திராவியம் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு அதே அறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது 2 குழந்தைகளைம் சேர்த்து கட்டியணைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் திராவியம் மற்றும் அவரது மகள்கள் ரியாஷினி, விஜயகுமாரி ஆகிய 3 பேரும் அலறல் சத்தம் போட்டு தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளின் சத்தம் கேட்டு அருகாமையில் உள்ள அடுத்தடுத்து அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த பொண்ணுரங்கன் உள்பட வீட்டில் இருந்த அனைவரும் எழுந்து பார்த்தனர்.
அப்பொழுது கண் எதிரே குழந்தைகள் தீயில் கருகியதை கண்டு அதிர்ச்சியில் அடைந்த பொன்னுரங்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விவேக் மிட்டல் மற்றும் விஜயகுமார் ஆகியோர் தீயில் கருகியவர்களை மீட்க முயன்ற போது இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இருவரும் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நள்ளிரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதன் காரணமாக பொன்னுரங்கத்தின் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. மேலும், நத்தாமூர் கிராமம் புகை மண்டலம் சூழ்ந்து காணப்பட்டது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் ஏற்பட்ட பொழுது வீட்டின் அனைத்து கதவுகளும் உள்பக்கமாக தாழிட்டு இருந்ததால் அந்த கிராமத்தில் உள்ள ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வீட்டின் சுவரை உடைத்து வீட்டில் இருந்த மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பொன்னுரங்கன் வீட்டின் அனைத்து பகுதிகளும் தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சோக சம்பவம் நத்தாமூர் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :2 Thousand Ruppes : இன்றுடன் காலாவதியாகும் ரூ.2ஆயிரம் நோட்டுகள்! கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?