கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த அரசு. இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னை ஆன்லைன் மூலமாக சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு, முதலில் சில முறை ஜெயித்ததாகவும், பின்னர் அதனை தொடர்ந்து போது பல லட்சம் ரூபாய் வரை இழந்துவிட்டதாகவும், ஒரு கும்பல் இந்த மோசடி செயலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் பலர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தலைமையகத்திற்கு மாற்றப்பட்டது. புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் பிரிவு எஸ்பி சிபிசக்கரவர்த்தி தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட நபர்கள் பணம் செலுத்திய வங்கி கணக்கை வைத்து நடத்திய விசாரணையில் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிக்கு இடைத்தரகராக செயல்பட்ட பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்த சசிகுமார், ராஜ்குமார், ராஜேஷ்குமார், முகமது ஆசிப், முக்கிய நபரான அம்பத்தூரைச் சேர்ந்த சாய் குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூதாட்ட மோசடி
சட்டவிரோதமாக பல ஆன்லைன் சூதாட்ட செயலிகள் இருப்பதாகவும், பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தையை நம்பி பொதுமக்கள் பலர் செயலியை பதிவிறக்கம் செய்வதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சூதாட்ட செயலியின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருப்பதாலும், சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் பணத்தை பல நாடுகளிலிருந்து அனுப்ப ஏதுவாக அந்தந்த மாநிலங்களில் 10 இடைத்தரகர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த இடைத்தரகர்கள் தங்களது வங்கிக் கணக்கை அந்த செயலி மூலம் இணைத்து வைத்திருக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணத்தை அனுப்பியவுடன் அதை கிரிப்டோகரன்சிகளாக மாற்றி, வெளிநாட்டிலுள்ள உரிமையாளர்களுக்கு அனுப்ப வேண்டும். இப்படி செய்தால் இடைத்தரகருக்கு 10 விழுக்காடு கமிஷன் வழங்கப்படும்.