கள்ளக்குறிச்சி:உளுந்தூர்பேட்டை அடுத்து திருநாவலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் படித்த மாணவ, மாணவிகளை பட்டமளித்து பாராட்டி கௌரவித்தார். பின்பு நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், 'படித்த இளைஞர்கள் இன்ஜினியர் ஆகணும். டீச்சராக ஆகணும். டாக்டர் ஆகணும். நடிகர் ஆகணும். ஆனால் அரசியல்வாதியாகணும் என யாரும் சொல்லி கேள்விபட்டதில்லை. ஆனால், அவர்களுக்கு அரசியல் தேவை என ஆழமாக கருதுகிறேன். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆனால், ஆளுநர் இளைஞர்களை நேர்மையான அரசியலுக்கு வாருங்கள் என்று அழைக்கலாம்.
நல்லவர்களும் படித்தவர்களும் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தால், அரசியல் எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கையில் எப்படி படிக்கிறீர்களோ அதேபோல் திருமணமும் சரியான நேரத்தில் செய்து கொள்ள வேண்டும். நான் படிக்கிறேன், வேலை தேடுகிறேன் என திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள், பெற்றோர் தேர்ந்தெடுத்து கொடுத்தாலும் நல்லது. ஆனால் நாமாகவே பெண்ணை தேர்ந்தெடுத்தாலும் பெற்றோர் ஒப்புதலோடு திருமணத்தை செய்துகொள்ள வேண்டும் என சின்ன கோரிக்கையாக வைக்கிறேன்.