கள்ளக்குறிச்சி நகராட்சியில் சேரும் குப்பைகளை கொட்ட இடமில்லாமல் அங்குள்ள மயானத்தில் டன் கணக்கில் கொட்டி வருகின்றனர்.
இதனால், சடலங்களை புதைக்க இடம் இல்லாமலும், துர்நாற்றத்தாலும், குப்பைகளால் தகன மேடைக்குச் செல்லும் வழி இடையூறு ஏற்பட்டு இருப்பதாலும், மயானத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், குப்பைகளை அகற்ற எவரும் முன்வராத நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் இன்று ஈடுபட்டனர்.
இந்தப் பணியை மேற்கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏவுமான வசந்தம் கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம். இந்தப் புதிய மாவட்டத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, சீர்மிகு மாவட்டமாக ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
அது சிறிதளவும் நடைபெறவில்லை. நகராட்சியில் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மயானத்தை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி மயானத்தை சீர்கேடு அடையச் செய்துள்ளது.
குப்பைகளை அகற்றும் திமுகவினர் இறந்தவர்களின் சடலங்களை கூட புதைக்க இடம் இல்லை என்கின்ற போது வேதனையாக இருக்கிறது. மக்கள் இருக்கும் பகுதியில் இந்த குப்பை மேடு இருப்பதால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
மாவட்ட ஆட்சியரிடமும் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் அவர்கள் குப்பைகளை அகற்ற முன்வராத காரணத்தினால் குப்பைகளை அகற்றும் பணியில் இன்று திமுக கட்சி ஈடுபட்டு, நாங்கள் எங்கள் சொந்த செலவில் பொதுமக்களுக்கு இடையூரை ஏற்படுத்தும் குப்பைகளை அகற்றி துர்நாற்றத்தில் இருந்தும், நோய்த் தொற்றில் இருந்தும் பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனக் கூறினார்.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:இரண்டாவது நாளாக தீப்பிடித்து எரியும் குப்பைக் கிடங்கு!