கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஜூலை 13ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய பெற்றோர் தொடர்ந்து மகளின் சடலத்தை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 14ஆம் தேதி மாணவி உடல் முதல்முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டதில் மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்ததாகவும், இதனால் மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்கள், பெற்றோர் இடத்தில் எழுந்தது. அதனையடுத்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு உடற்கூராய்வு செய்யக்கோரியும் மற்றும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரியும் மனு தொடுத்தனர்.
இதற்கிடையில் ஜூலை 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் மாபெரும் கலவரமாக மாறியது. 50க்கும் மேற்பட்ட பேருந்துகள், வாகனங்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன. அதேசமயம் பெற்றோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 18ஆம் தேதியன்று மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிட்டது.
மேலும், அதற்கான சிறப்பு மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டு, 19ஆம் செவ்வாய்க்கிழமை மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவி உயிரிழந்து 11 நாள்கள் கடந்த நிலையில் ஜூலை 23ஆம் தேதி மாணவியின் சொந்த கிராமத்துக்கு சடலம் கொண்டு வரப்பட்டு, மாணவிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.