புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் கவுதம் (41). இவர், தனது நண்பர்கள் ராஜேஸ்குமார், வினோத், பாலாஜி, பாரத், ராகுல், கணேஷ், ஏழுமலை ஆகிய எட்டு பேரும் இரண்டு கார்களில், நேற்று முன்தினம் (ஜூலை 28) கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகேயுள்ள சேராப்பட்டு மலைக்கிராமத்திற்கு சென்றனர்.
இந்நிலையில், சிறுகலூர் நீர்விழ்ச்சியை பார்க்க இரவு 9 மணியளவில் காரில் சென்றபோது, காரிலிருந்து இறங்கிய கெளதம் ஆற்றின் ஆழத்தை தெரிந்து கொள்ள ஓடும் ஆற்றில் இறங்கினார். கல்வராயன்மலையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் மழை பெய்து வருவதால், ஆறு, ஓடைகளிலும், நீர்வீழ்ச்சிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சிறுகலூர் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது கவுதம் இறங்கியதால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். கண் இமைக்கும் நேரத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கெளதமை, மீட்க அவரது நண்பர்கள் போராடி தோற்றனர். இரவு நேரம் என்பதால் காப்பாற்ற முடியாமல் தத்தளித்தனர். இதனையடுத்து, சங்கராபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரியலூர் உதவி காவல் ஆய்வாளர் துரைராஜ், ஊர்மக்களுடன் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிறுகலூர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கெளதமின் உடல் கூடலூர் ஆற்றில் கரை ஒதுங்கியது. இறந்தவரின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.