காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளருமான பல்லம் ராஜு நேற்று (மார்ச் 26) கள்ளக்குறிச்சிக்கு வருகைதந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:
திமுக, காங்கிரஸ் கூட்டணி மக்கள் நலன் சார்ந்த நல்ல கூட்டணி. இன்று தேசிய அளவில் மோடி அரசின் தவறான கொள்கைகளாலும், திட்டங்களாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு எடுத்துவரும் எந்த ஒரு முடிவும் மக்களின் பொருளாதார நிலையை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டுசெல்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள், உழவர்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில், மத்திய அரசு வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் விவாதங்களின்றி திடீரென இரு அவைகளிலும் நிறைவேற்றிவிட்டன. நூறு நாள்களுக்கு மேலாகப் போராடியும் உழவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜக கூட்டணியை விரும்பியிருக்க மாட்டார். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி கொண்டுவந்த எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழல் அதிகரித்துள்ளது. இன்று பொறியியல், மருத்துவம் படித்த ஏழு லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.