சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்தில் வன்முறை வெடித்தது. இவ்வன்முறையில் பள்ளியில் இருந்த பொருட்கள், பள்ளிப் பேருந்துகள் மற்றும் காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக சின்னசேலம் போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட விழுப்புரம் மாவட்டம், தொழுவந்தாங்கலைச் சேர்ந்த தந்தைப் பெரியார் திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் பிரபு, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 'வன்முறை நிகழ்ந்தபோது சம்பவ இடத்தில் தான் இல்லை எனவும், எந்த வாட்ஸ்அப் குழுவுக்கும் தான் அட்மின் இல்லை' என்றும் தெரிவித்துள்ளார்.
முதலில் குமார் என்பவரை முதல் எதிரியாக குறிப்பிட்டிருந்த போலீசார், பிறகு உள்நோக்கத்துடன் தன்னை முதல் எதிரியாக சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.