கள்ளக்குறிச்சி மாவட்டம் பரமநத்தம் கிராமத்தில் பட்டியலின பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள பொதுவான சாலை 20 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கிராம பட்டியலின பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், சங்கராபுரம் வட்டாட்சியர், பலதுறை சார்ந்த அலுவலர்களுக்கு மனு அளித்து, தங்கள் கிராமத்திற்கு செல்லும் பாதையை சீர்செய்து புதிய சாலையை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அக்கோரிக்கையை ஏற்று தற்போது இந்த பொதுப்பாதை சீர் செய்வதற்கான பணி தொடங்கப்பட்டது. இதற்கிடையில் பாதையின் முன் பகுதியில் சாலை அமைக்க சிறு பாலங்கள் கட்ட ஆயத்தப்பணி தொடங்கியபோது, அதேகிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் பொதுப்பாதையை ஆக்கிரமித்து சிறு பாலங்கள் கட்டவிடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேலும் சாலையை ஆக்கிரமிப்பு செய்பவர், மேல் சாதிக்காரர் என்பதால் பட்டியலின மக்கள் அவரிடம் தகராறு செய்தால் சாதி மோதல் ஏற்படும் என்று கருதி இன்று (அக்.19) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் குடியிருக்கும் பகுதியில் பந்தல் அமைத்து காலை 7 மணிமுதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சங்கராபுரம் காவல்துறையினரும், வட்டாட்சியர் நடராஜனும் உண்ணாவிரதத்தில் இருக்கும் கிராம பொதுமக்களிடம் விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
இதையடுத்து காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் பிரச்னைக்குரிய பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பினை எடுத்து சாலை அமைத்து தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக உறுதி அளித்தனர்.
இதையும் படிங்க:பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மகளிர் ஆணைய தலைவி ஆலோசனை!