தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
கள்ளக்குறிச்சி: மரவள்ளிக்கிழங்கு பயிர்களுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்து வந்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் கண்ணன்.
இவர் தனது சொந்த நிலத்தில் இரண்டு ஏக்கர் மரவள்ளிக்கிழங்கு பயிர் வைத்துள்ளார். இதற்கு நடுவே 20 கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக கச்சிராயபாளையம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையிலான காவலர்கள் கண்ணன் நிலத்தில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு நடுவே கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கண்ணனை கைது செய்த காவல் துறையினர் 20 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர்.