கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி விஜயலட்சுமி (25) என்பவர் தனது தாயுடன் பிரசவத்திற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் விஜயலட்சுமி அரியவகை ரத்தமான பாம்பே (ஹெச்.ஹெச். பிரிவு) ரத்த வகையைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு ரத்தம் கிடைக்கவில்லை. எனவே இங்கு சிகிச்சை அளிப்பது கடினம் என்பதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதனையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து அவசர ஊர்தி மூலமாகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கர்ப்பிணி விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர் அரியவகை ரத்தமான பாம்பே ரத்த வகையை ஏற்பாடுசெய்யுமாறு கூறியுள்ளார்.
இதனால் கவலையுற்ற விஜயலட்சுமியின் தாய் கண்ணீருடன் மருத்துவமனை வளாகத்திலிருந்த பொதுமக்களிடம் தனது மகளைக் காப்பாற்ற வலியுறுத்தி கதறி அழுதுள்ளார்.
இதனைக்கண்ட அங்கு பணியிலிருந்த புதுச்சேரி ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் செல்வம், உயிர்த்துளி ரத்ததான அமைப்பினை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து உயிர்த்துளி மூலமாக நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொண்டு, ஆறுதல் கூறி நம்பிக்கை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாம்பே ரத்த வகையை ஏற்பாடு செய்வதற்கான பணிகள் உயிர்த்துளி மூலமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் பத்து லட்சம் பேரில் நான்கு பேருக்கு மட்டுமே இருக்கக்கூடிய இந்த பாம்பே ரத்த வகையை ஏற்பாடு செய்வது, கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தற்போதைய ஊரடங்கு உத்தரவு காலத்தில் மிகவும் சவாலான காரியமாக இருந்தது.
இதனையடுத்து தன்னார்வலர் சந்தோஷ் ஜிப்மர் ரத்த வங்கிக்கு அழைத்துச்சென்று, கர்ப்பிணி விஜயலட்சுமிக்காக பாம்பே வகை ரத்த தானம் செய்யப்பட்டது.
இந்தத் தகவலை விஜயட்சுயின் தாயாரிடம் உயிர்த்துளி மூலமாகத் தெரிவித்தவுடன் கண்ணீருடன் இருந்த அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தற்போது விஜயலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தாயின் கண்ணீரை துடைக்க உதவிய ஆயுதப்படைக் காவலர் செல்வம், ரத்த தானம் செய்த சந்தோஷ் ஆகியோருக்கு கர்ப்பிணி நன்றி கூறினார்.
இதையும் படிங்க:கரோனா பாதித்தவர்களை ஒதுக்காமல் இயல்பாக நடத்துங்கள்!