கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்விழி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் ரொசாரியோ - ஜெயராணி. இவர்களுக்கு ரென்சிமேரி (5) என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராணி இறந்துவிட்டார். இதையடுத்து ரொசாரியோ வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயை இழந்த குழந்தை ரென்சிமேரியை ஜெயராணியின் தாய் பச்சையம்மாள் (70) தனது வீட்டிலேயே வளர்த்து வந்தார்.
அதே வீட்டில் ஜெயராணியின் திருமணமாகாத அக்கா ஆரோக்கியமேரி (35) என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 8) காலை குழந்தை ரென்சிமேரி சாப்பிடுவதற்காக, ஆரோக்கியமேரி இட்லி கொடுத்தார். ஆனால் தனக்கு இட்லி வேண்டாம் என்று கூறி விட்டு, பக்கத்து வீட்டிலுள்ள குழந்தைகளுடன் விளையாட ரென்சிமேரி சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியமேரி வீதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அடித்து, வீட்டுக்கு இழுத்து வந்தார். பின்னர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு குழந்தையை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள், குழந்தையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த தியாகதுருகம் காவல்துறையினர், ஆரோக்கிய மேரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'டாக்டர் பாம்பு கடிச்சிட்டு...எந்த பாம்பு?..' இந்தா இருக்கே;- கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்!