கள்ளக்குறிச்சி:மனிதன் சம்பாதிப்பதே நல்ல உணவு சாப்பிடுவதற்காகத் தான் என்பார்கள், பலர். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை; நல்ல உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே பல உணவுப்பிரியர்களின் நோக்கமாக உள்ளது.
அப்படிப்பட்டவர்களின் முதல் தேர்வாக இருப்பவர் தான், இட்லி விற்பனையாளர் ஒகையூர் அலமேலு.
கண்களில் வைராக்கியம் மின்ன, தலையில் இட்லி, சட்னி, சாம்பாருடன் கூடிய கூடையை சுமந்துகொண்டு, காலை 7 மணிக்கு எல்லாம் வீதி வீதியாகச் சென்று 'இட்லி வாங்கலோயோ.. இட்லி' என அலமேலு அம்மா பெருங்குரல் கொடுத்து சப்தமிடுவது தான் மாயம், அவரிடம் இட்லி வாங்க வீட்டு வாசலுக்கே வந்துவிடுகின்றனர், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ள சு.ஒகையூர் கிராம மக்கள்.
ஈரம் நிறைந்த சலுகை
நான்கு இட்லி வாங்கினால் ஒரு இட்லி இலவசம். 10 ரூபாய்க்கு இரண்டு இட்லி வாங்கினாலும் அதற்குச் சட்னி - சாம்பார் உண்டு என்னும் ஈரம் நிறைந்த சலுகைகளும் ஒகையூர் அலமேலு அம்மாவின் கைப்பக்குவமும் பலரை வாடிக்கையாளராக கட்டிப்போட்டுள்ளன.
ஆர்டர் செய்த ஐந்து நிமிடங்களில் வீட்டு வாசலில் உணவுப்பொட்டலங்கள் வந்து நிற்கும் இந்த ஆன்லைன் காலத்தில் தான்,
'இட்லியோ இட்லி' என சு.ஒகையூர் கிராமத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது, அலமேலு அம்மாவின் குரல்..!
வயது ஐம்பதை ஒட்டியிருந்தாலும் தொய்வுறாத அலுமேலு அம்மாவின் நடை, அவரது விடாமுயற்சியையும் வைராக்கியத்தையும் நமக்கு வெளிச்சம் இட்டு காட்டுகின்றன.
வைராக்கியத்தாய் அலமேலு அம்மா
இட்லி விற்று குடும்பத்தைத் தாங்கும் அலமேலு அம்மா - இது ஓர் சாமானியரின் கதை! 50 வயதிலும் இட்லி விற்கும் அவரது வைராக்கியத்திற்கான காரணத்தை அறிய அவரிடம் பேசினோம்.
'என் மகன் ஆறுமுகம் டீச்சர் ட்ரெயினிங் படிச்சிருக்கான். அவன் ஒரு மாற்றுத்திறனாளி. டீச்சருக்கான பரீட்சையில் பாஸ் ஆகுறதுக்காகப் படிச்சிட்டு இருக்கான்.
அரசு வேலை கிடைக்காததால, அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்க முடியல. என் மகளோட கணவர் இறந்துட்டார். இரண்டு பிள்ளைகளை வைச்சு, மகள் கஷ்டப்பட்டு வாழ்ந்திட்டு இருக்கா. என் குடும்பமே என்னை நம்பி தான் இருக்கு. நான் இட்லி வித்துதான் எங்க குடும்பமே பிழைக்குது. அரசு என் மகனுக்கு ஏதாவது உதவணும்' என ஒரு வேண்டுகோளுடன் முடிக்கிறார், அலமேலு அம்மாள்.
ஒவ்வொரு ஊரிலும் குடும்பத்தின் வறுமையைப் போக்கத்துடிக்கும் பல எண்ணற்ற அலமேலு அம்மாக்கள் உண்டு. அந்த அலமேலு அம்மாக்களின் ரத்தத்தில் இன்னும் குடும்பத்தைக் காக்கும் துடிப்பும் ஒலியும் இருந்துகொண்டே இருக்கின்றன.
அரசு, இத்தகையவர்களை சரியாக அடையாளம் கண்டு, அவர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தித்தரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. குறைந்தபட்சம் இந்த அலமேலு அம்மாவின் கதையாவது நம் அரசிற்கு கேட்க வேண்டும்.
இதையும் படிங்க: அதிமுக தலைமைப் பதவி: ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றித் தேர்வு