கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து அரசின் உத்தரவை மீறி கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்வது, டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட கல்வராயன் மலைகளில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுவருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கல்வராயன்மலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
கல்வராயன் மலையில் தொடரும் கள்ளச்சாராய வேட்டை இந்த ஆய்வில் மொட்டையனூர், விதுர், வேங்கோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கள்ளச்சாராயம் காய்ச்சி வந்துள்ளது தெரியவந்துள்ளது. காவல்துறையினரின் தேடுதல் வேட்டை குறித்து தகவலறிந்த கள்ளச்சாராய வியாபாரிகள் தப்பியோடினர். பின்னர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 31 ஊரல்களை அழித்துள்ளனர். இந்த ஊரல்களில் ஆறாயிரத்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். முன்னதாக, காவல்துறையினர் கடந்த வாரம் கல்வராயன் மலையில் கள்ளச்சாராய ஊரல்களை அழித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளச்சாராய ஊரல்களை அடித்து நொருக்கிய போலீஸ்