200 ஆண்டுகள் பழமையான கோயிலில் முதன்முறையாக நுழைந்த ஆதிதிராவிடர்கள்! 'கோவிந்தா' கோஷத்துடன் சாமி தரிசனம் கள்ளக்குறிச்சி:எடுத்தவாய்நத்தம் என்ற கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் உள்ளே நுழைந்து சாமி தரிசனம் செய்ய, பிற ஆதிக்க சாதியைச் சேர்ந்த மக்கள் தடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், இந்த கோயிலில் இதுநாள் வரையில் உள்ளே நுழையாத நிலையில், இன்று (ஜன.2) வைகுண்ட ஏகாதசி நாளில் 300-க்கும் அதிகமான பட்டியலின மக்கள் பலத்த போலீசாரின் பாதுகாப்புடன் கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதனால், பல ஆண்டுகளாக அப்பகுதியில் கடைப்பிடித்து வந்த தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் விதமாக அமைந்த இந்த செயல்பாட்டுக்கு, இந்த ஆதிதிராவிட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
எல்லோரையும் போல, தாங்களும் இந்த கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட வேண்டும் என பட்டியலின மக்கள் முடிவெடுத்து கடந்த ஆறு மாத காலமாக போராடி வந்துள்ளனர். இதற்காக சமீபத்தில், எழுந்த பிரச்னையின் காரணமாக சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் சமாதானக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, அவர்கள் கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்று வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, ஆதிதிராவிட மக்கள் இந்த வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ளே நுழைந்து சாமி கும்பிடுவதற்கு இன்று ஜனவரி 2ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. முன்னதாக இந்நிகழ்வையொட்டி, இன்று எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 300 போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி.ஆக இருந்து தற்போது டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற பகலவன், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீ நாதா ஆகியோரது தலைமையில் டிஎஸ்பிக்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள், அதிரடி படையினர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
போலீஸாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ஆதிதிராவிடர் சமூக மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பகுதியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பூஜை சாமான்களுடன் ஊர்வலமாக வந்து வரதராஜ பெருமாள் கோயிலுக்கு உள்ளே 'கோவிந்தா கோவிந்தா' என்ற பக்தி முழக்கத்துடன் நுழைந்து சாமி கும்பிட்டனர்.
கோயிலுக்குள் இதுவரை வராத, ஆதி திராவிட சமூக மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் கோயிலுக்குள் நுழைந்து பெருமாளுக்கு பரவசமாக பூஜை செய்து வழிபட்டனர். ஆதிதிராவிடர் சமூக மக்கள் சாமி கும்பிடுவதற்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
முன்னதாக, புதுக்கோட்டையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது கள்ளக்குறிச்சியிலும் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு கோயிலுக்குள் எல்லோரையும் போல, நுழைந்து சாமி தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தந்த மாவட்ட நிர்வாகத்திற்கும், கோட்டாட்சியருக்கும், அவற்றிற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட போலீசாருக்கும் பல தரப்பினரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'; இறையூரில் அனைத்து சமூக மக்களும் சாமி தரிசனம்!