கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கவிதா. ஆரம்பத்தில் பெரும்பான்மையானவர்களைப் போன்று செயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்ட இவர், நாளைடைவில் ஆர்வ மிகுதியாலும், விவசாயத்தின் மீது ஏற்பட்ட அன்பாலும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார்.
செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை வேளாண் துறையில் வாங்கும் இவர், அதை விதைத்து இயற்கை முறையில் வளர்த்து அறுவடை செய்கிறார். இப்படி பயிரிடல் மூலம் கிடைக்கும் இயற்கையான விதைகளை எந்த லாப நோக்கமும் இல்லாமல் வேளாண் துறைக்கு வழங்குகிறார். இவரது இந்த பயணம் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இந்தப் பயணம் தொடர்வதாக கூறும் கவிதா, தன்னை விவசாயியாக அடையாளப்படுத்திக் கொள்வதையே பெருமையாகக் கருதுகிறார்.
இது குறித்து கவிதா கூறுகையில், "ரசாயன உரம் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்வதைக் காட்டிலும் ஆர்கானிக் முறையில் விவசாயம் மேற்கொண்டால் 50 விழுக்காடு செலவை குறைப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமான நஞ்சில்லா உணவு தானியங்களை உற்பத்தி செய்யலாம். என்னுடைய நிலத்தில் விளையும் விளைபொருட்களை சந்தையிலோ, சில்லரை விலைக்கோ விற்காமல் மற்ற விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அரசு வேளாண்துறை விதை பண்ணைகளுக்கே மொத்தமாக நிலையான ஆதார விலைக்கு கொடுத்து வருகிறேன்" என்கிறார்.