கள்ளக்குறிச்சி : ஒரு சேர 5 பேர் நிற்க முடியாத ஒரு அறை; அது தான் அவள் வீடு. சில ஆண்டுகளாக மருத்துவக் கனவுகளுடன் இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களைக் கலவரம் கொள்ளச் செய்த மருத்துவ படிப்பிற்கான(நீட்) நுழைவுத் தேர்வில் தங்கள் குடும்பக் குழந்தை ஜெயித்த கதையை, நெருக்கியடித்தபடி நின்று அவர்கள் விவரிக்கிறார்கள், ஜெயபிரியாவின் குடும்பத்தினர். அவர்களின் பின்னால், கையில் சட்டப் புத்தகத்தை ஏந்தி, வானம் நோக்கி விரல் உயர்த்தியபடி படத்தில் நிற்கிறார், அண்ணல் அம்பேத்கர்.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த நீட் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பூச்சாண்டி காட்டிய தேர்வு பய பூனைக்கு, கழுத்து மணி கட்டியிருக்கிறார், அரசுப் பள்ளி மாணவி ஜெயபிரியா. நீட் தேர்வில், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் முதலிடமும், தமிழ்நாடு அளவில் 18ஆவது இடமும், பட்டியலினப் பிரிவில் மூன்றாவது இடமும் பெற்று தேர்வாகியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள காட்டுவன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் - சந்திரமதி தம்பதியின் இரண்டாவது மகள் ஜெயபிரியா; அரசுப் பள்ளி மாணவி. இவரது தந்தை தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்க்கிறார்.
எல்லா அரசு பள்ளி மாணவர்களைப் போலவே ஜெயபிரியாக்குள்ளும் மருத்துவர் கனவு விதை விழுந்திருக்கிறது. அதற்காக தீவிரமாக உழைத்திருக்கிறார், ஜெயபிரியா. தேர்வுக்காக தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி எடுக்க முடியாத அவருக்கு உதவியிருக்கிறது அரசு வழங்கிய நீட் பயிற்சி. அதற்கு வலுசேர்த்திருக்கிறது ஆசிரியர்கள், அக்கா, குடும்பத்தினர் கொடுத்த ஊக்கம்.
'எல்லோரும் சொல்லுற மாதிரி, நீட் தேர்வு கஷ்டமா இருக்கும்னு தான் நானும் நினைச்சேன். திட்டமிட்டு தீவிரமா உழைச்சா எந்த தேர்வையும் எதிர்கொள்ளலாம்னு நீட் எழுதுன பிறகு தான் தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட இந்த வெற்றியில என் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நிறைய பங்கிருக்கு' என வெற்றியின் சந்தோஷத்தை, அதற்காக உழைத்தவர்களுகளுடன் பகிர்ந்து கொள்கிறார், ஜெயபிரியா.
பாடத்திட்டங்களில் வேறுபாடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்ளும் பயிற்சி இல்லை என வந்த விமர்சனங்களை எதிர்கொண்ட தமிழ்நாடு அரசு, அரசு சார்பில் பயிற்சி மையங்களை ஏற்படுத்தி, அரசுப் பள்ளி மாணவர்களும் தேர்வில் திடமாக பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து உதவியது.