காதலனின் தாயை புரட்டி எடுத்த பெண்கள் ஒருவர் கூட தடுக்காத கொடுமை கள்ளக்குறிச்சி:சங்கராபுரம் அருகே உள்ள s.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (முடி திருத்தும் தொழிலாளி). இவரின் மகன் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அதே கிராமத்தில் முடி திருத்தும் தொழிலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், சூர்யா தொழில் கல்வியான ஐடிஐ (ITI) முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சூர்யாவும், அதே கிராமத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேலும், சூர்யாவும் அந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் வீட்டுப் பெண்ணை காதலித்து அழைத்துச் சென்றதாகக் கூறி, சூர்யாவின் தாயை அப்பெண்ணின் உறவினர்கள் நேரடியாக அவரது வீட்டிற்குச் சென்று கடந்த சில மாதங்களாகவே சண்டையிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் சூர்யாவின் தாய் சுமதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சூர்யா திருமணம் செய்து கொண்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உறவினர்கள், ''உன் மகன் எங்கே?'' எனக் கேட்டுள்ளார்.அதற்கு தாய் சுமதி, ''என் மகன் எங்கு சென்றான் என்று எனக்கு தெரியவில்லை'' எனக் கூறியுள்ளார்.
அதற்குப் பெண்ணின் உறவினர்கள், ''உன்னை அடித்துக் கொலை செய்தால், உன் மகன் தானாக வருவான்'', எனக் கூறி சூர்யாவின் அம்மா சுமதியை தகாத வார்த்தைகளால் பேசியும், அவர் சார்ந்த சமுதாயப் பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தி திட்டியும், சூர்யாவின் வீட்டிலிருந்து தாய் சுமதியை வெளியே தர தரவென இழுத்து அடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர், அப்பெண்ணின் உறவினர்கள். இந்த தாக்குதலில் சுமதி படுகாயமடைந்தார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த தாக்குதலில் தாய் சுமதி பலத்த காயம் ஏற்பட்டு தற்போது கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டார். ஒரு பெண் என்று கூட பாராமல் சாதி வெறியோடு ஊருக்கு மத்தியில் தர தரவென இழுத்து வைத்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், அப்பெண்ணை தாக்கியவர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் சூர்யாவின் தாய் சுமதி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் சங்கராபுரம் காவல்துறையினர் மாற்று சமூகப்பெண்ணின் தாய் சிவகாமி, தந்தை ஏழுமலை உள்ளிட்ட 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி: கைதான மாஜி தலைமை காவலர் பகீர் வாக்குமூலம்!