மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று (ஆக.10) கள்ளக்குறிச்சி சென்ற முதலமைச்சர் பழனிசாமி, பள்ளிக்கல்வித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, சமூகநலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் ரூபாய் 20 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன்பின்பு ஊராட்சித் துறை, பொதுச் சுகாதாரம், குடும்பநலத் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் 15 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிற்கான புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அப்போது, 15 ஆயிரத்து 16 பயனாளிகளுக்கு 33 கோடி ரூபாய் மகளிர் சுயஉதவிக் குழுக் கடன், தனிநபர் கடன், தோட்டக்கலைத் துறையின் மூலம் காய்கறி, பருப்பு விரிவாக்கம், வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.