தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.2,000 தான் மொத்த செலவு.. யூடியூப் மூலம் மட்டுமே பிரச்சாரம்.. ஈரோடு கிழக்கில் இப்படி ஒரு வேட்பாளரா? - Chennai Vlogger

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தீபன் சக்கரவர்த்தி என்ற யூடியூபர் இளைஞர்களுக்கு அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக களமிறங்கியுள்ளார். தேர்தலில் வேட்பாளர் செலவே இல்லாமல் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்ற சுவாரஸ்யமான விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்த செய்தி தொகுப்பை இங்கு காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 21, 2023, 3:56 PM IST

ஈரோடு கிழக்கில் போட்டியிடும் யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். திரும்பும் இடமெல்லாம் கூட்டம் கூட்டமாக வாக்கு சேகரிக்க பல கட்சிகளின் தொண்டர் படைகள் களமாடி வருகின்றன. இதோடு, வாக்காளர்களை கூடாரங்களில் அடைத்து வைக்கிறார்கள், அரசியல் கட்சியினர் கணக்கு பார்க்காமல் கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கும் பஞ்சம் இல்லை. ஈரோடு வாக்காளர்கள் பெறும் இந்த உபசரிப்பு தொடர்பான நக்கல் பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

இந்த நிலையில், தனி ஆளாய் இடைத்தேர்தல் வேட்பாளராய் களமிறங்கி டிஜிட்டல் பிரச்சாரம் மூலம், ஈரோட்டின் பிரச்சினைகளை பதிவிட்டு வருகிறார், தீபன் சக்கரவர்த்தி எனும் 32 வயது இளைஞர். ஈரோடு கிழக்கு தொகுதியில் 'மைக்' சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தீபன் சக்கரவர்த்தியின் சொந்த ஊர் நாமக்கல். சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் நிருபராக சில ஆண்டுகள் வேலை பார்த்த இவர் அந்த பணியை விட்டுவிட்டு, Chennai Vlogger என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் பயணங்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார். அவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நாமக்கல் தொகுதியில் தீபன் சக்ரவர்த்தி சுயேட்சையாக போட்டியிட்டார். அந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல், தேர்தல் செலவினங்கள், பிரச்சார கட்டுப்பாடுகள், வாக்குப்பதிவு விதிமுறைகள் என தேர்தல் நடைமுறைகள் குறித்த வீடியோ பதிவுகளை அவரது யூடியூப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும், இதன்மூலம் தேர்தல் என்றால் என்ன? அதனை எவ்வாறு சந்திப்பது? தேர்தலில் போட்டியிட என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பன உள்ளிட்ட வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு அந்த தேர்தலில் போட்டியிட்டார்.

மற்ற வேட்பாளர்கள் போன்று இல்லாமல் வீட்டிற்கு வீடு சென்று பிரச்சாரம் செய்யாமல் டிஜிட்டல் மூலமாகவே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அந்தத் தேர்தலில் அவர் 'லாரி' சின்னத்தில் களம் கண்டு 249 வாக்குகளைப் பெற்ற போதிலும் இளைஞர்கள் மத்தியில் தனி கவனம் பெற்றார்.

இந்நிலையில் தற்போது, மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக தீபன் சக்ரவர்த்தி போட்டியிடுகிறார். 'மைக்' சின்னத்தில் போட்டியிடும் அவர் டிஜிட்டல் மூலமாகவே பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 40 லட்சம் ரூபாய் வரை தேர்தல் செலவு செய்யலாம் என தெரிவித்துள்ள நிலையிலும், தீபன் சக்ரவர்த்தியோ வெறும் 2 ஆயிரத்திற்குள் தனது தேர்தல் செலவீனங்களை அடக்கலாம் என்ற புதிய யுக்தியை தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தீபன் சக்கரவர்த்தி என்ற யூடியூபர்!

இதுகுறித்து சுயேட்சை வேட்பாளர் தீபன் சக்ரவர்த்தி கூறுகையில், "ஒரு வேட்பாளர் தேர்தல் செலவினமாக ரூ.40 லட்சம் வரை செலவிடலாம் என தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது. நடைமுறையில், இதைத்தாண்டி பல கோடிகளை செலவிடுகிறார்கள் என்ற நிலையில், டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்தால், என்னைப் பொறுத்தவரை ரூ.40 லட்சம் என்பதே அதிகம் என நினைக்கிறேன். ஈரோடு நகரின் முக்கிய பிரச்சினைகளை பதிவிடுவேன். அதோடு, எனக்கு வாக்களியுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து எனது வலைத்தளங்களில் பதிவிடுவேன். இதைத் தாண்டியும், எந்த ஒரு வாக்காளரையும் நான் நேரில் சந்தித்து வாக்கு கேட்கமாட்டேன். எனது இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் தனக்கு வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்" என்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்யும்போது, வைப்புத்தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்தியுள்ளேன். இந்த தேர்தலில் மொத்தமாக ரூ.2 ஆயிரம் மட்டும் செலவு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். நாமக்கல்லில் உள்ள வீட்டில் வீடியோ பதிவுகளை வலைத்தளத்தில் வெளியிட வசதிகளை செய்து அதற்கு தேர்தலுக்கான 'வார் ரூம்' என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தீபன் சக்கரவர்த்தி என்ற யூடியூபர்!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் செலவினங்களை, நான்கு நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் ஆணையத்தில் சமர்பிப்பது ஒரு நடைமுறை. நமது டிஜிட்டல் வேட்பாளர் தீபன் சக்கரவர்த்தி, நேற்று தனது செலவுக்கணக்கை அதற்கான பில்லுடன் தாக்கல் செய்துள்ளார். மைக் சின்னம் கொண்ட ஸ்டிக்கர் அடிக்க செலவிட்ட ரூ.315 தான் அவரது செலவுக்கணக்கு ஆகும். 77 வேட்பாளர்கள் களமிறங்கும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், இதுபோன்ற சுவாரஸ்யங்களும் இருந்தால்தானே தேர்தல் களம் களைக்கட்டும் என்பதில் ஐயமில்லை.

ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தீபன் சக்கரவர்த்தி என்ற யூடியூபர்!

ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி, இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த கட்சி இவைகளுக்கு நடுவே உள்ள பிற கட்சிகள் என பல்முனைப் போட்டிகள் நிலவும்போது மக்களின் மனதில் மாற்றத்தையும், அதே நேரத்தில் சமூகத்தில் முதலில் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன? என்ற சீரிய சிந்தனையோடு களத்தில் இறங்கியுள்ளார், தீபன் சக்கரவர்த்தி. வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவேன் என்றும் அரசின் செயல் திட்டங்களை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்ப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "ஓட்டுக்கு ரூ.15,000 திட்டம்" ஈரோடு இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பு?

ABOUT THE AUTHOR

...view details