திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருப்பூரிலுள்ள ஆயத்த ஆடை நிறுவனமொன்றில் டைலராகப் பணியாற்றிவந்தார். மேலும் கடந்த ஓராண்டுக்கு முன், தான் காதலித்த கலாவதி என்பவரை வீட்டுச் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதுவரை இருவருக்கும் குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் தனது நண்பர் கோகுலக்கண்ணனுடன் நேற்று (செப்.2) ஈரோடு மாவட்டம் திங்களூர் நல்லாம்பட்டியில் உள்ள நண்பர் ராகவன் வீட்டிற்கு வந்துள்ளனர்.
பின்னர், மூவரும் மதியம் துடுப்பதி அருகேயுள்ள ராக்காவலசு கீழ்பவானி கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளனர். நாகராஜும், ராகவனும் கால்வாயில் குளித்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக நாகராஜ் ஆழமான பகுதிக்கு சென்று தத்தளிக்கத் தொடங்க தண்ணீரும் வேகமாக வந்து கொண்டிருந்ததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.