ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஸ் (35). இவர் அதே பகுதியில் நவீன விசைத்தறிக்கூடம் அமைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரது நவீன விசைத்தறிக் கூடத்தில் பீகார் மாநிலம், நக்வான் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் குமார்(25), சுகேந்திர குமார்(28), ரவீந்திர குமார், சவுராப் ரஞ்சன் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளனர்.
இதில் சவுராப் ரஞ்சன் தனது மனைவியுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நவீன் குமார், சுகேந்திர குமார் மற்றும் ரவீந்திர குமார் ஆகியோர் விசைத்தறி கூடத்திலேயே உள்ள அறையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நவீன் குமார், சுகேந்திர குமார் மற்றும் ரவீந்திர குமார் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தறிப்பட்டறை உரிமையாளர் ரமேஸ் காலையில் விசைத்தறி கூடத்திற்கு வந்து பார்த்த போது நவீன்குமார் மற்றும் சுகேந்திர குமார் ஆகியோர் தலையில் ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஸ் கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்குப் புகார் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவுந்தப்பாடி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில் வடமாநில இளைஞர்கள் நான்கு பேரும் மது அருந்தியும் கஞ்சா விற்பனை செய்தும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும்; இதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடத்திருக்கலாம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.