ஈரோடு: ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் ரேஷன் அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கும் 1000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய 4 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என அறிவித்தது.
இதற்கான டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் ரேஷன் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், இன்று ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாம்பாளையம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் பெறுவதற்கு ஏராளமான பொது மக்கள் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க:"பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்தால் அனைத்திலும் சுதந்திரம் கிடைக்கும்" - தமிழிசை..!
அப்போது அங்கிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் மகளிர் உரிமை தொகை பெறுபவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் எனவும், மற்றவர்களுக்கு வழங்கப்படாது எனவும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.