தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீட்டுப் பணத்தில் கைவரிசை! பெண் குடும்பத்தினருடன் தப்பியோட்டமா? போராட்டத்தில் ஈடுபட்ட கூலித் தொழிலாளிகள்!

ஈரோட்டில் கூலி தொழிலாளர்களிடம் இருந்து வாரம் மற்றும் மாதச் சீட்டுகள் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்த பெண், திடீரென குடும்பத்தினருடன் தலைமறைவானதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோட்டில் சீட்டுப்பணத்தில் கைவரிசை காட்டியப் பெண் குடும்பத்தினருடன் தலைமறைவு
ஈரோட்டில் சீட்டுப்பணத்தில் கைவரிசை காட்டியப் பெண் குடும்பத்தினருடன் தலைமறைவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 6:23 PM IST

Updated : Oct 28, 2023, 7:37 PM IST

ஈரோட்டில் சீட்டுப்பணத்தில் கைவரிசை காட்டியப் பெண் குடும்பத்தினருடன் தலைமறைவு

ஈரோடு: கருங்கல்பாளையம் அடுத்துள்ள ராமமூர்த்தி நகரில் வசித்து வந்தவர் கலா. இவரது கணவர் செல்வராஜ். ஈரோடு மார்கெட்டில் பழக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கலா வாரச்சீட்டு, ஆடி மாத சீட்டு மற்றும் பங்குனி மாதச் சீட்டுகள் என நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கலா நடத்தி வந்த வாரம் மற்றும் மாதச் சீட்டுகளில் கக்கன் நகர், கிருஷ்ணம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் சேர்ந்துள்ளனர். முதலில் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்தி வந்ததாகவும், பின்னர் சீட்டு தொகையை 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கலா மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சிறு சேமிப்பு என எண்ணி சீட்டில் இணைந்த அப்பகுதி கூலித் தொழிலாளிகள் அனைவரும் உயர்த்தப்பட்ட சீட்டு பணத்தையும் முறையாக செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், சீட்டு தவணைகள் முடிந்து ஒரு மாதமாகியும் பணத்தை திருப்பி கொடுக்காமல் கலா காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கலாவிடம் பொதுமக்கள் கேட்டபோது, வங்கியில் பணம் எடுப்பதில் சிக்கல் நிலவுவதாகவும், ஓரிரு நாட்களில் பணத்தை கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக கலாவின் வீடு பூட்டி இருப்பதை கண்டு சந்தேகமடைந்த பொதுமக்கள், அப்பகுதியில் விசாரித்து உள்ளனர்.

அப்போது, கலா சீட்டு பணத்தை ஏமாற்றிவிட்டு குடும்பத்தினருடன் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை கேட்டு சீட்டு பணம் செலுத்திய கூலித்தொழிலாளிகள், கலாவின் வீட்டை முற்றுகையிட்டனர். கட்டிட தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர்கள் என பல்வேறு கூலி தொழிலாளர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை பெற்று கலா தனது குடும்பத்தாருடன் தலைமறைவானதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் கலாவை கைது செய்து, அவர்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்பு, போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:ஈரோட்டில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு; எதிர்ப்பு தெரிவித்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!

Last Updated : Oct 28, 2023, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details