சத்தியமங்கலம் அருகே மினி லாரியை வழிமறித்த காட்டு யானை ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர், குன்றி வனப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. குன்றி கிராமத்திற்கு கடம்பூரிலிருந்து, அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சாலை வழியாகப் பயணிக்க வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் இச்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை குன்றியிலிருந்து அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் பாரம் ஏற்றிய மினி லாரி, கடம்பூர் செல்வதற்காக வனப்பகுதி சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒரு ஆண் யானை சாலையில் நின்றபடி மினி லாரியை வழிமறித்தது.
யானையைக் கண்ட வாகன ஓட்டி அச்சத்துடன் வாகனத்தை நிறுத்தினார். காட்டு யானை வாகனத்தின் அருகே வந்தபோது மக்காச்சோளத்தைப் பாதுகாக்க, லாரியின் பின்புறம் அமர்ந்திருந்த விவசாய கூலித்தொழிலாளி, யானையைக் கண்டு நடுங்கியபடி அச்சத்துடன் சத்தம் போட்டார்.
சிறிது நேரம் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை பின்னர் லாரியின் பக்கவாட்டு வழியாக பின்புறம் நோக்கி சென்றது. இதைத் தொடர்ந்து மினி லாரி ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பினர். யானை வழிமறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயியைக் காட்டு யானை மிதித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'நான் எங்க போவேன்' - ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டிய வனத்துறையினர்