தென்னந்தியாவில் மிகவும் செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் வாழ்வதற்கேற்ற இடமாக உள்ளது. ஒரு லட்சத்து நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. யானைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் தாண்டிய நிலையில், கோடை காலமான தற்போது தீவனம், குடிநீர் ஆகியவற்றைத் தேடி யானைகள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. வனம் காய்ந்து வனக்குட்டைகள் வறண்டும் காணப்படுவதால், சேறும் சகதியுமாக உள்ள நீரை யானைகள், சிறுத்தைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள் குடித்து வருகின்றன.
இதனால் மாசடைந்த நீரை பருகும் விலங்குகள் குடற்புழு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன. தற்போது யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனக்கோட்டங்களில் நான்கு புதிய செயற்கைகுட்டைகள் அமைக்கப்பட்டு, அதில் வாடகை லாரி மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.