ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் அருகேயுள்ள குளத்துப்பாளையத்தில் வசித்துவருபவர் ரமேஷ். கூலித் தொழிலாளியான இவர், நந்தினி என்பவரை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
கணவன் மனைவிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இன்று காலை வழக்கம்போல் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நந்தினி தனது இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வைத்து தீயைப் பற்ற வைத்தார்.
இதில் குடிசை வீடு முழுவதும் பரவிய சிலிண்டர் தீயினால் கடும் சப்தத்துடன் வெடித்தது. குடிசை தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஈரோடு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.