தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2300 ஆண்டுகள் பழமையான ஈமச்சின்னம்... இரும்புக் காலத்துக்கு அழைத்துச் செல்லும் கொடுமணல் அகழாய்வு! - Kodumanal Excavation

கொடுமணல் குறித்து முதலாவதாக, ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என பேராசிரியர் செ.ராசு அறிக்கை வெளியிட்டார். அதன் பின்னர் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 1979ஆம் ஆண்டு மாதிரி அகழாய்வு குழியை கொடுமணலில் தோண்டி ஆய்வு மேற்கொண்டது. இந்த அகழாய்வில் ரோமானிய ஓடு ஒன்று கிடைத்தது. பின்னர், பேராசிரியர் எ.சுப்பராயலு 1985 முதல் 1991 வரை நான்கு கட்டங்களாக அகழாய்வைத் தொடர்ந்தார். இப்படி, குறிப்பிட்ட காலங்களில் ஆய்வு மேற்கொள்வதும், பின்னர் அதனை நிறுத்தி வைப்பதும் என நொய்யல் ஆற்று நாகரிகம் மண்ணுக்குள்ளேயே காத்திருந்தது...

கொடுமணல்
கொடுமணல்

By

Published : Jun 24, 2020, 3:21 PM IST

தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் செய்த அகழாய்வில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க பொருள்கள் கிடைத்ததுபோல, ஈரோடு மாவட்டம் கொடுமணலிலும் பண்டையத் தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் தோண்டத்தோண்ட வெளிவருகின்றன.

கொடுமணல் குறித்து முதலாவதாக, ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என பேராசிரியர் செ.ராசு அறிக்கை வெளியிட்டார். அதன் பின்னர் தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை 1979ஆம் ஆண்டு மாதிரி அகழாய்வு குழியை கொடுமணலில் தோண்டி ஆய்வு மேற்கொண்டது. இந்த அகழாய்வில் ரோமானிய ஓடு ஒன்று கிடைத்தது. இதன் பிறகு பேராசிரியர் எ.சுப்பராயலு 1985 முதல் 1991 வரை நான்கு கட்டங்களாக அகழாய்வைத் தொடர்ந்தார்.

கொடுமணல்

இப்படி, குறிப்பிட்ட காலங்களில் ஆய்வு மேற்கொள்வதும், பின்னர் அதனை நிறுத்தி வைப்பதும் என நொய்யல் ஆற்று நாகரிகம் மண்ணுக்குள்ளேயே காத்திருந்தது. தற்போது மீண்டும் கொடுமணலில் 50 ஹெக்டேர் பரப்பளவு பகுதியில் தமிழ்நாடு தொல்லியல் துறையினரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பை உருக்கும் உலை, பெருங்கற்கால கல்வட்டம், பல வண்ண கல் மணிகள், குண்டு மணிகள், தரைத்தளம், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புக் கூடுகள், அடுப்புகள், 250க்கும் மேற்பட்ட ஈமச்சின்னங்கள், புதைகுழிகள், சுடுமணைப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கொடுமணலின் காலம்....

இந்த ஊரில் கிடைக்கப்பெற்ற பொருள்களின் காலம் மற்றும் அவற்றின் தன்னைமையைக் கொண்டு பார்க்கும்போது கொடுமணலின் காலம் வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலமாக இருக்கக்கூடும். அதாவது இரும்புக்காலம் எனலாம்.

பண்டையத் தமிழர்களின் அடையாளம்

இது குறித்து தலைமையாசிரியர் கண.குறிஞ்சி, “கொடுமணல் குறித்த விவரங்கள், தனிப்பாடல்கள், செப்பேடுகள், பட்டையங்களில் கொடுமணம் என்ற பெயரில் காணப்படுகின்றன. இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள்கள் 2500 (கிமு 500) ஆண்டுகள் பழமையைக் கொண்டது. இங்கு இரும்பாலான போர்க்கருவிகள் அதிகமாக கண்டெடுக்கப்பட்டன. இதிலிருந்து தமிழர்கள் அந்த காலக்கட்டத்திலேயே இரும்பை ஸ்டீலாக மாற்றி பயன்படுத்தும் நுட்பம் தெரிந்துவைத்திருப்பது உறுதியாகிறது.

கொடுமணல் புதைந்திருக்கும் வரலாற்று உண்மைகள்...!

இங்கு அணிகலன்கள் தயார் செய்வதற்காக கொல்லுப்பட்டறைகள் இயங்கியதற்கான அடையாளம் உள்ளன. மிகவும் கைநேர்த்தியுடன் செய்யப்பட்ட பச்சை, நீல கல் அணிகலன்களும் இங்கு கிடைத்தன. இதனால் ஈர்க்கப்பட்ட வட நாட்டினர் கொடுமணலுக்கு வணிகரீதியாக வந்திருக்கலாம், இது இவ்வூரை வணிக கேந்திரமகவும் நமக்கு காட்டுகிறது” என்றார்.

கொடுமணலில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் கேரள மாநிலம் முசிறி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பானை ஓடுகளில் தமிழி எழுத்துரு மூலமாக குறிக்கப்பட்டிருக்கும் தமிழ் பெயர்களான ஆதன், சாத்தன் போன்றவை அங்கு கல்வியறிவு மிகுந்திருந்ததைக் காட்டுகின்றது

தமிழ் பேராசிரியர் கமலக்கண்ணன், “கொடுமணலில் 21 நாளாக தொல்லியல் ஆய்வு நடைபெற்றுவருகிறது. நான்கு அலுவலர்களின் தலைமையில் 30 பேர் இந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆதிச்சநல்லூர்-கீழடி வரிசையில் கொடுமணலியிலும் தமிழர்களை உலகளவில் கொண்டு சேர்க்கும். சங்க காலத்திலேயே பிற நாட்டவர்களுடன் தொடர்பிலிருந்ததற்கு சான்றான ரோமானிய நாணயங்கள், மேலை நாட்டு பொருள்கள் கிடைக்கின்றன.

கடந்த 40 ஆண்டுகளாக அவ்வப்போது நடைபெற்ற இந்த ஆராய்ச்சியை 3 மாதங்களில் கைவிடாமல் தொடர்ச்சியாக செய்தால் வரலாற்று சிறப்பு மிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்களை கண்டெடுக்க முடியும். இதனை காட்சிப்படுத்தினால் அதைக் காணும் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இது குறித்து அறிவதோடு இந்த ஆய்வை மேம்படுத்தும் வழிமுறைகளையும் கூறுவார்கள்” என்றார்.

கொடுமணலில் கிடைத்த பொருள்களில் என்ன வித்தியாசம்?

இதுவரை அகழாய்வில் கிடைத்த பொருள்களில் இருந்து கொடுமணலில் கிடைத்த ஈமச்சின்ன அடையாளம் (கல்லறைகள்) வித்தியாசப்படுகிறது. இந்த ஈமக்காடு 2300 ஆண்டுகள் பழமையானது.

ஈமச்சின்னத்தைச் சுற்றி பெரிய அளவிலான கற்கள் வட்டமாக வைக்கப்பட்டுள்ளன. இரண்டு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள ஈமச்சின்னத்தின் ஒரு பகுதியில் குழுவின் தலைவர் போன்றவரின் உடலும், அதன் மறுபகுதியில் அவருக்குப் பிடித்தமான பொருள்களும் வைத்து அடக்கம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த முறை, இதுவரை கண்டறியப்பட்ட தொல்லியல் பார்வையில் மிகவும் வித்தியாசமானது.

இது குறித்து வரலாற்று ஆசிரியர் மே.து.ராசுகுமார், “தமிழ்நாட்டில்தான் எழுத்துருக்களுடன் 70 விழுக்காடு மண்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த அடுக்குகளை அகழ்ந்து வேறுபட்ட பொருள்களை நாம் எடுத்திருக்கவேண்டும். ஆனால் இந்த அகழ்வாராய்ச்சி 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்படிருந்தது. அந்த காலக்கட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பாக்கு வெட்டி, இரும்பு உருக்கு உலை உள்ளிட்ட பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா என்பதும் ஐயத்திற்குரிய ஒன்றே. கொடுமணலிலும் இந்த பொருள்கள் பாதுகாக்கப்படவில்லை. ஈரோடு அருங்காட்சியகத்திலும் இந்த பொருள்கள் காட்சிப்படுத்தப்படவில்லை.

ஒரு இடத்தில் அகழாய்வு மேற்கொள்ளும்போது, பொருள்களைக் கைப்பற்றியதும் நிலத்தை விட்டுச்சென்றால் நில உரிமையாளர்கள் விவசாயம் செய்ய முயற்சிசெய்வார்கள், இதனால் மொத்த வரலாறும் புதைக்கப்படும்

எனவே, அரசு அந்நிலத்தை கையகப்படுத்தவேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து அகழாய்வுகளும் விவசாயத்தை காட்டியது, ஆனால் கொடுமணல் வடநாட்டினரோடு கொண்டிருந்த வணிக தொடர்பை காட்டியுள்ளது” என்றார்.

தொடர்ந்து அகழாய்வு செய்யும்போது ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட பொருள்களின் காலத்திற்கு முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்த தொல்பொருள்கள் கொடுமணலில் கிடைக்கக்கூடும் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள்..!

இதையும் படிங்க: கீழடிக்கும் மூத்த கொடுமணல் : கி.மு 3ஆம் நூற்றாண்டின் தொல்பொருள்கள் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details