ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் "ரூகோஸ்" என்ற சுருள் வெள்ளைப் பூச்சிகளால், ஓலைகளில் அடிப்பகுதி கறுப்பு நிறமாக மாறியது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள், தென்னை மரங்களில் நோய்த் தாக்குதல் ஏற்படாமல் தடுக்க வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள், ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட நம்பியூர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் உள்பட பல்வேறு விவசாயிகளின் தோட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த நன்மை செய்யும் பூச்சி இனங்களும் ஒட்டுண்ணிகளும் அதே அளவு உள்ளதாக அப்போது தெரியவந்தது.
விவசாயிகளுக்கு தென்னை மரத்தில் சுருள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, எந்தவிதமான மருந்துகளையும் தெளிக்க வேண்டாமெனவும், எளிய வகையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த எவ்வாறு பொறிகளை அமைப்பது என்பது குறித்தும் வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குநர் பிரபாகர், பூச்சியியல் பேராசிரியர் நெல்சன் ஆகியோர் விளக்கமளித்தனர்.
விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் சுருள் பூச்சியினால் தென்னைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், அதனால் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே போதுமானதாகவும் இருக்கும் என்றும், வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காப்பான் படம் வெளிக்கொணர்ந்த கதை: பூச்சித் தாக்குதல்... உருவானதா? உருவாக்கப்பட்டதா?