தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதே இலக்கு' - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!

ஈரோடு: கல்வித் துறைக்காக 28,957 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்ற இலக்கு இந்த அரசுக்கு உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

By

Published : Sep 6, 2019, 5:51 PM IST

செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஈரோட்டில் நடைபெறுகிறது. இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்கள் வீதம், 320 பேர் பங்கேற்றுள்ளனர். இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் ஆகிய 5 பாடங்களில், தலா 2 பேர் வீதம் மாவட்டத்திற்கு 10 பேர் எனத்தேர்வு செய்யப்பட்டனர்.

இப்படி அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட 320 பேருக்கும் பெங்களூரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் போட்டித் தேர்வுகள் குறித்து பயிற்சி அளிக்கின்றனர். இதன் பின் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், அந்தந்த மாவட்டங்களிலுள்ள பிற ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நீட், ஜே.ஈ.ஈ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது குறித்து பயிற்சி அளிக்கவுள்ளனர்.

திண்டல் தனியார் கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது நீட் விலக்கு பெற வேண்டும் என்பது தான் அதிமுக அரசின் இலக்கு என்றார். ஆனாலும், அதுவரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என்றும், சிறந்த பயிற்சியால் கடந்தாண்டை விட, இந்த ஆண்டு கூடுதலான மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 19,427 தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். பின்லாந்து நாட்டில் மாணவர்கள் படிக்கும் போதே, செயல்முறைப் பயிற்சி வழங்கப்படுவதாகக் கூறிய அவர், மாநிலத்திலும் அது போன்ற பாடத் திட்டத்தைக் கொண்டு வந்து 9ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும் என்றார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு

சரிவரப் படிக்காத, கல்வியில் பின்தங்கிய மாணவர்களைச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றும் தனியார்ப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details