ஒவ்வொரு மனிதருக்கும் எப்படியாவது சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்பதே வாழ்நாள் கனவாக உள்ளது. ஆனால், இன்றைய பொருளாதார சூழ்நிலையில், வாடகை வீட்டில் குடியேறுவதே பெரும் துயரமாக உள்ளது. இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக, கட்டுமானத்தொழில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முடங்கிப்போய் இருந்தது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுமானத்தொழில் தொடங்கி, நடைபெறத் தொடங்கினாலும்; கரோனா அச்சம் காரணமாக, வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊரிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பணிக்குத் திரும்பாத நிலையில், கட்டுமான நிறுவனங்கள் என்னசெய்வதென்றே தெரியாமல் திணறி வருகின்றன.
இந்த நிலையில் இருக்கின்ற ஆட்களை வைத்துப் பணிகள் நடைபெற்று வந்தாலும், அவர்களுக்கு ஊதியம் அதிகரித்துள்ளதால் வீடு கட்டுபவர்களும் கட்டுமான நிறுவனங்களும் கடும் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இதுமட்டுமின்றி கட்டுமானப் பொருட்களான சிமென்ட், இரும்புக் கம்பிகளின் விலையும் உயர்ந்துள்ளது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வரை உயர்ந்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரும்புக் கம்பியும் டன் ஒன்றுக்கு ரூ.60,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஈரோடு கட்டுமானப் பொறியாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் மோகன் கூறும்போது, 'கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றம் குறித்து கூட்டமைப்பு சார்பில், ஏற்கெனவே பலமுறை அரசிற்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். கரோனா பொதுஊரடங்கு சமயத்தில், கட்டுமானப் பொருட்களின் விலை 15% முதல் 20% வரை உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. பொது ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்குச் சென்ற தொழிலாளர்கள் இன்னும் பணிக்குத் திரும்பாத சூழலும், அங்கேயே வேறு தொழிலை செய்துவரும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
தற்போது சிமென்ட் மூட்டை ஒன்று ரூ.400க்கும் கட்டுமான இரும்புக்கம்பிகள் டன் ஒன்றுக்கு ரூ.60,000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றத்தினால் கட்டுமானத் தொழில் 75% மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த விலை ஏற்றம் கட்டடத் தொழிலையும், கட்டடப் பொறியாளர்களையும், கட்டடத் தொழிலாளர்களையும் பாதிக்கும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, இதில் அதிகம் பாதிப்பது கட்டட உரிமையாளர்களும் பொறியாளர்களும் தான். அரசு கவனம்கூர்ந்து விலை ஏற்றத்தைக் குறைத்து நடைமுறைப்படுத்தினால்தான், கட்டுமானத் தொழில் நடைபெறும்' என்றார்.