ஈரோடு:தமிழ்நாடு அரசு ஆசிரியர் கூட்டணி சார்பில் சுமார் இரண்டு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது.
இதில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்றார். நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால்களுக்குப் பாசனத்திற்காக ஆகஸ்ட் 15ஆம் தேதி நீர் திறந்துவிடப்படும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தலுக்கு முன் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் மீதும், புதிதாகக் கொடுக்கும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் பெரிய திட்டங்களைச் செயல்படுத்த ஏற்பாடு செய்துவருகிறார்.