ஈரோடு:பவானிசாகர் அணை 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகு பாசனபகுதியில் நிலக்கடலை மற்றும் எள் சாகுபடிக்காக தண்ணீர் திறக்குமாறு பாசன பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்ணீர் திறக்க பரிந்துரை செய்து தமிழ்நாடு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதிகளில் உள்ள ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் இரட்டை படை மதகுகள் பாசன பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இன்று (பிப்.1) தண்ணீர் திறந்துவிடப்பட்டது.