ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்க மாநகராட்சியின் சார்பில் காவிரி ஆற்றின் அருகே பல்வேறு இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கபட்டுள்ளன. ஆனால் காவிரி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவுகளாலும், சாக்கடை கழிவுகளாலும் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என்று தொடர்ந்து புகார் எழுந்துவந்தது.
இப்புகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க முடிவு செய்து சுமார் 485 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பவானியை அடுத்துள்ள ஊராட்சி கோட்டை பகுதியிலிருந்து நீரேற்று நிலையம் அமைத்து அங்கிருந்து 60 வார்டுகளுக்கு ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.