Viral video: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வீடு வீடாக குக்கர் தரும் காங்கிரஸ் ஈரோடுகிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அத்தொகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக கட்சியின் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வெட்டுக்காட்டுவலசு என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு வீடு வீடாக குக்கர் விநியோகம் செய்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் வித்யாசமான பாணிகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் வாக்குகளுக்காக மறைமுகமாக பொதுமக்களுக்கு ஓட்டுக்கு 4000 ரூபாய் பணம், வீட்டுக்கு வீடு கோழிக்கறி, மளிகை சாமான்கள், பிரியாணி போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் குக்கர் விநியோகம் செய்துள்ளனர். இது குறித்து வெளியாகி உள்ள வீடியோவில், புதிய குக்கருடன் வரும் ஒரு பெண் தானும் தனது உறவினர் குடும்பத்தினரும் குக்கர் வாங்கியுள்ளதாகவும், மேலும் இப்பகுதியில் பலரும் குக்கர் வாங்க சென்றுள்ளதாகவும் கூறுகிறார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் குக்கர் வழங்கப்பட்டு வருவதாக கூறும் அவர், கை சின்னத்திற்கு ஓட்டுபோட குக்கர் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். அதேசமயம் மற்றொரு முதியவர் குக்கருக்கான டோக்கன் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை என கவலையாக கூறுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம்..? அமைச்சர் உதயநிதி கேள்வி