ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டர்கரட்டுப்பாளையம் கிராமத்தில் 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவரும் நிலையில், இவர்களுக்கு ஒரே ஒரு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் தங்களின் பயன்பாட்டிற்காக ஆற்று நீர் விநியோகம் வேண்டும் என கடந்த பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்; போக்குவரத்து பாதிப்பு! இந்நிலையில், அந்த ஒரு மணி நேரம் தண்ணீரும் தற்போது இல்லாமல் குடிநீருக்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் கொண்டுவருவதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு அளித்தும், குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே இதுகுறித்த தகவலறிந்து கடந்தூர் காவல் துறையினர், கோபிசெட்டிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, குடிநீர் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என அலுவலர்கள் உறுதியளித்தையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.