ஈரோடு:சென்னிமலை திருமலை நகரைச் சேர்ந்தவர், வேலுச்சாமி. இவரிடம் கடந்த 2021ஆம் ஆண்டு சென்னிமலையைச் சேர்ந்த வேலுமணி என்பவர், விஜிபிஇன்ஜினியர்ஸ் பில்டர்ஸ் என்ற பெயரில் வீடு கட்டி தரும் நிறுவனத்தை தான் நடத்தி வருவதாகவும், குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாகவும், இதற்கு சிறிய தொகை கொடுத்தால் போதும் என்றும் மீதத் தொகைக்கு வங்கியில் கடனுதவி பெறலாம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய வேலுச்சாமி இரு இடங்களில் வீடு கட்ட ஒப்பந்தம் போட்டு உள்ளனர். இதற்காக முன் பணமாக 3 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார்.
முதற்கட்டமாக வேலை தொடங்கி சில மாதங்களில் கூடுதலாக பணம் தேவை எனக் கூறி, இது வரை ரூ.13 லட்சம் வரை பெற்றுக் கொண்டு வீடு கட்டி தராமல் இருந்து வந்துள்ளார். மேலும், வங்கிகளில் கடனுதவி பெற்றுத் தராமல் இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டின் வேலைகளையும் பாதியிலேயே விட்டுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வேலுச்சாமி கேட்டபோது, தனக்கு முழுவதும் நஷ்டம் ஆகி விட்டதாக கூறியது மட்டுமல்லாமல் அநாகரிகமாக வார்த்தைகளால் பேசியும் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதே போன்று வேலுமணி அப்பகுதியைச் சேர்ந்த பலரிடமும் குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக கூறி சுமார் 50 லட்சம் ரூபாய் வரை பெற்று உள்ளார். இதனால், வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் இன்று (ஜூலை 19) கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேலுச்சாமி, சென்னிமலையில் வசிக்கும் தங்களுக்கு திருமலை நகரில் ஆதி திராவிடர் நலத்துறையில் இருந்து வீடு தந்ததாகவும், இதற்கான கட்டுமானப் பணிகளின்போது வந்து வீடு கட்டுவதற்கு கடன் பெற்று தருவதாக கூறிக்கொண்டு சென்னிமலை விஜிபி இன்ஜினியர் வேலுமணி என்பவர் வந்ததாக கூறினார்.
தனது வீடு உள்பட தனது தாயாரின் வீடு ஆகியவற்றையும் ரூ.11 லட்சத்துக்கு கட்டித் தருவதாக அவர் பேசியதாகவும், இதற்காக அடிக்கடி பணம் பெற்றுக் கொண்ட அவர், தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி விட்டு சென்றதாக வேலுச்சாமி கூறினார்.
இதனைத்தொடர்ந்து, மீண்டும் வேலுமணி கேட்ட ரூ.13 லட்சம் பணத்தையும் அவருக்கு அளித்ததாகவும், பின்னர் நஷ்டம் ஆகிவிட்டதாகக் கூறி இனிமேல் வேலை செய்யமுடியாது என்று கூறியதாக வேலுமணி கைவிரித்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து யாரிடம் சென்று முறையிட்டாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி மிரட்டல் விடுப்பதாகவும், 'ஓலைக் குடிசை வீட்டில் வாழ்ந்த உங்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தந்ததால் ரொம்ப திமிரா?' என்று பேசுவதாகவும் வேலுச்சாமி கூறினார்.