சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைக்கிராமத்தில் ஸ்ரீ கும்பேஸ்வரசுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலைச் சுற்றிலும் வாழும் மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக மேற்கொண்டுவருகின்றனர். அடர்ந்த காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் விவசாயம் செழிக்கவும் யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து மக்களைப் பாதுகாத்து அருள்புரிய வேண்டியும் விரதம் இருந்து இக்கோயிலின் தேர்த்திருவிழா தொடங்கியது.
விழாவையொட்டி சித்தூர் கும்பேஸ்வரசுவாமி, ஆலமலை பிரம்மதீஸ்வரர் ஆகிய சுவாமிகளை அழைத்து வருதல் நிகழ்ச்சியும் நள்ளிரவு இரண்டு மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
ஸ்ரீ கும்பேஸ்வரசாமி கோயில் தேர்த்திருவிழா மதியம் நான்கு மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் யானை, புலி வாகனத்தின் மீது அமர்ந்து ஸ்ரீ கும்பேஸ்வரசாமி கோயிலை வலம்வந்தார். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ கும்பேஸ்வரசாமி விக்கிரகத்தை தேரில் வைத்து பக்தர்கள் தேர் இழுத்தனர். இந்த தேர்த்திருவிழாவில் பக்தர்கள் வாழைப்பழங்களை வீசி வழிபட்டனர்.
கோயிலில் உயரமான நந்திக்கம்பத்தைத் தூக்கி ஆடும் இளைஞர்கள் தங்களது பலத்தை அறியமுடியும் என்பதால் இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர். ஆசனூர், ஒங்கல்வாடி, அரேபாளையம், மாவள்ளம், தேவர்நத்தம், கேர்மாளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சந்தன கடத்தல் வீரப்பன் வழிபடும் கோயில் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:'குரங்கணி ட்ரெக்கிங் இப்போ போக முடியாதுங்க...' - காரணம் இதுதானா?