முழு ஊரடங்கு உத்தரவை மீறி, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரு, நான்கு சக்கர வாகனங்களில் பொது மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
ஈரோடு மாவட்டத்தில் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, ஜி ஹெச் ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வாகனங்களில் அதிகளவில் பொதுமக்கள் பயணம் செய்துவந்தனர். இதைக் கட்டுப்படுத்த, மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை விசாரிக்கும் காவல்துறையினர் தடையை மீறி வெளியே வருபவர்கள் மீதும், முகக்கவசம் அணியாதவர்கள் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர். நேற்று (மே.15) தடையை மீறி, இரு, நான்கு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். ஊரடங்கை மீறியதாக, 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதேபோன்று கடலூர் மாவட்டத்தில், நேதாஜி ரோடு, பாரதியார் சாலை, நெல்லிக்குப்பம்- பண்ருட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலும் தடையை மீறி வெளியே வந்த 200க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
வாகனங்களை பறிமுதல் செய்யும் காவல்துறையினர் பறிமுதல் செய்த வாகனங்களை என்ன செய்வது என்பது குறித்தான முறையான அறிவுறுத்தல்கள் இல்லாததால், அதனை உரிமையாளர்களிடமும் ஒப்படைக்க முடியாமல் காவல்துறையினர் குழப்பத்தில் உள்ளனர். வாகன ஓட்டிகளும் செய்வதறியாமல் சாத்தூர் காவல் நிலையம் முன்பு நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.