ஈரோடு: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வட்டமலைப்புதூர் என்ற இடத்தில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதில், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு தங்கள் சமுதாயம் சார்ந்த மணமகனையே திருமணம் செய்து கொள்வோம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு, பெண்களிடம் மேடையில் உறுதிமொழி வாங்கினார்.
இதைத் தொடர்ந்து, இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பல்வேறு சமூக நீதி அமைப்புகள் இந்த சம்பவத்திற்கு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன் பேசும்போது, “கலை என்ற பெயரில் வள்ளி கும்மி ஆட்டத்தை ஊரெங்கும் கொண்டு சென்று, கொங்கு மாவட்டதில் உள்ள பிரதான சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் பயில வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தீர்கள்.
கிராமத்திற்கு வள்ளி கும்மி பயிற்சி அளிக்க வந்தவர்கள், இதுபோல ஒரு வேண்டுகோளை பொது வெளியில் வைத்தபோது, அது தவறானது, பல்வேறு சமூக மக்கள் வாழும் ஒரு இடத்தில் ஒரு சாதியினர் மட்டும் ஒரு கலையை பயில வர வேண்டும் என்று சொல்வது ஜனநாயக காலகட்டத்தில் மக்களை கேவலப்படுத்துவதாகும் என்று எங்கள் ஊரிலிருந்த முற்போக்கு கருத்தாளர்கள் கண்டித்தோம்.
தற்போது தாங்கள் பெண்களை "ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண் மகன்களை மட்டும் திருமணம் செய்து கொள்வோம்" என்று உறுதிமொழி எடுக்கச் சொல்கிறீர்கள். இது சற்றும் அறிவுக்கும், எதார்த்தத்திற்கும் புறம்பானது. தாங்கள் ஒரு பொறியியல் படித்த பொறிஞரும் கூட. அது மட்டுமல்ல, தாங்கள் கே.கே.சி என்கிற பெயரில் ஒரு பெரிய லாரி போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகின்றீர்கள்.
தாங்கள் தங்கள் ஊரான பெருந்துறை - காசிப்பாளையத்தில் வேளாண்மை மட்டுமே செய்து கொண்டிருந்த உங்கள் முன்னோர்களைப் போல இருந்திருந்தால் இப்படி பொதுவெளியில் பேசலாம், உறுதிமொழி எடுக்கலாம். அது பற்றி அன்றைக்கு யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால், நவீன காலத்தில் அரசியலில் ஜனநாயகமும், கல்வியில் அறிவியலும் கொடி கட்டிப் பறக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டில் முதல் கால் பகுதியை கடந்து கொண்டிருக்கின்றோம்.
தங்களுக்கு அருகில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியிலும், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் கொங்கு மாவட்டத்தில் உள்ள பிரதான சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே படிக்க வைப்போம் என்று அவர்கள் சொல்லவில்லை. அதற்கு அடுத்து திண்டலில் உள்ள வேளாளர் கல்வி நிறுவனங்கள், கொங்கு மாவட்டதில் உள்ள பிரதான சமூகத்தைச் சேர்ந்தோருக்கு மட்டும் கல்வி கொடுப்போம் என்று அவர்களும் சொல்லவில்லை. அனைவரையும் இணைத்துக் கொண்டு கல்விச்சாலையை நடத்தி, சிறந்த கல்வியை அவர்கள் வழங்கி வருகிறார்கள்.
இந்தக் கல்வி நிறுவனங்களில் பயின்ற அந்த பிரதான சமூக வீட்டு வேளாண் குடி ஆண்களும், பெண்களும் இதர அனைத்து சாதி ஆண்களும், பெண்களும் மிகச்சிறந்த கல்வி பெற்று நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமளவு பயன்பட்டு வருகிறார்கள். அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட சாதியினரை மட்டும் ஆசிரியர்களாக, பணியாளர்களாக அமர்த்தம் செய்வதில்லை.
அனைத்து சாதியினரையும், திறமையின் அடிப்படையில் அமர்த்தம் செய்து, அந்த நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகின்றனர். நீங்களும் கூட உங்கள் கே.கே.சி நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைக்கும், துலக்குநர் (கிளீனர்) வேலைக்கும், குறிப்பிட்ட சமூக பையன்கள் மட்டும் வர வேண்டும் என்று சொல்வதில்லை.
ஏனென்று சொன்னால் அந்த வேலையை யார் செய்தாலும் உங்களுக்கு அதில் லாபம் வந்துவிடும்.
எனவே, உங்களுக்கு " உழைப்பதற்கு ஆள் வேண்டும் "என்று கருதுகின்றபோது, எல்லா சாதியிலிருந்தும் ஆட்களை எடுத்துக் கொள்கிறீர்கள். அவர்கள் உழைப்பைச் சுரண்டி செல்வத்தை பெருக்கிக் கொள்கின்றீர்கள்.
நீங்கள் கோவை சாலையில் கட்டி உள்ள மிகப்பெரிய கட்டடத்தை கொங்கு மாவட்டதில் உள்ள பிரதான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால், அந்தக் கட்டடம் அங்கே உருவாகி இருக்காது. உங்கள் வீட்டுக்கு வருகிற மின்சாரத்தை, நீங்கள் குறிப்பிடும் சமூகம் மட்டும் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
அப்படி சொன்னால் உங்களுக்கு மின்சாரமே கிடைக்காது.
தாங்கள் ஓட்டுகிற பேருந்தில், தாங்கள் ஓட்டுகிற லாரியில் கொங்கு மாவட்டதில் உள்ள பிரதான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஏற வேண்டும், சரக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்வதே இல்லை. முகவர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்து சரக்கு கிடைத்தால், உங்கள் வண்டி ஓடிப்போய் ஏற்றிக் கொள்கிறது. காரணம், அது உங்களுக்கு தொழில். அந்தத் தொழிலில் வருமானம் கொழிக்கிறது.
அதற்காக சரக்கு ஏற்றுகிறவர் என்ன சாதி? சரக்கை தொலைதூரம் கொண்டு சென்று பெற்றுக் கொள்பவர்கள் என்ன சாதி? என்று நீங்கள் ஜாதகம் பார்ப்பதில்லை. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளராகவும் செயல்படுகிற கே.கே.சி பாலு, நீங்கள் இரண்டு முறை பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டீர்கள். அப்போது நீங்கள் எனக்கு கொங்கு மாவட்டதில் உள்ள பிரதான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் வாக்களிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை.
கையைக் கூப்பி, எல்லா தெருக்களுக்கும் சென்று, "பொன்னான வாக்குகளை அளியுங்கள், அளியுங்கள்" என்று கேட்டு வந்ததை உலகமே அறியும். உங்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கூட, திருச்செங்கோட்டிலே போட்டியிட்டு வெற்றி பெற்றது, எல்லா சாதி மக்களின் வாக்குகளாலும்தான். உங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமக்கல் சின்ராஜ் வெற்றி பெற்றதும், அனைத்து சாதி மக்களின் வாக்குகளாலும்தான்.
இதை மறந்து விட வேண்டாம். இப்படி பொதுவெளியில் உங்கள் வளமான வாழ்க்கைக்கு தேவையானவற்றை எல்லா சாதி மக்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்கின்றீர்கள். ஆனால், இங்கு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த பெண்களை மட்டும் குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான் நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று, தாங்கள் கலாச்சார உபதேசம் செய்வது எதற்கு? அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தார்கள்?
நீங்கள் வரலாற்றின் சக்கரத்தை பின்னோக்கி இழுக்கப் பார்க்கின்றீர்கள். இது மிகக் கேவலமாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. நீங்கள் கனவு காண்பதற்கு மாறாக, கொங்கு மாவட்டதில் உள்ள பிரதான சமூக வீட்டுப் பெண்கள் கல்வியில் மிக உயர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மிகச்சிறந்த மருத்துவர்களாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைக்கும் தொழில் வல்லுநர்களாகவும், அரசு நிர்வாகத்தில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வருகிறார்கள்.
அவ்வாறு கல்வி பயிலச் செல்லும் பெண்கள் தங்கள் மனமொத்த இளைஞர்களோடு விருப்பத் திருமணமும் செய்து கொண்டு, சிறந்த முறையில் வாழ்க்கை நடத்தியும் வருகிறார்கள். அவர்களின் வளர்ச்சி என்பது, அவர்கள் பெற்ற கல்வியாலாகும். அவர்களின் வாழ்க்கை நெறியே, அவர்களை மகிழ்ச்சியாக வாழ வைக்கிறது.
நவீன காலத்தில் கல்வி வளர்ச்சியில் பெண்கள் மிகப்பெரிய அளவில் முன்னேறி இருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் ஒரு வட்டத்திற்குள் நில்லுங்கள் என்று சொல்வது அறிவுக்கு பொருத்தமற்றது. சமூக வளர்ச்சிக்கு எதிரானது. கொங்கு மாவட்டதில் உள்ள பிரதான சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், மறுமணம் செய்து கொள்வது என்பது தற்போது இயல்பானதாக மாறிவிட்டது. அதை தாங்கள் தடுத்து நிறுத்த விரும்புகின்றீர்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
கணவனை இழந்து எத்தனை பெண்கள் வாழ முடியாமல் வீட்டில் முடமாகிப் போய் கிடந்தார்கள். பெரியார் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளின் சிந்தனையால் பெண்களின் மறுமணம் என்பது சமூகத்தில் இயல்பான பண்பாடாக மாறிவிட்டது. உங்களைப் போன்ற "கலாச்சாரக் காவலர்கள்" அதையும் நாளை தடுத்து நிறுத்த முன் வருவீர்களா?
அதுமட்டுமல்ல, பெண்களை உறுதிமொழி எடுக்கச் சொன்ன நீங்கள், ஏன் அங்கே ஆண்களையும் திரட்டி இதுபோல் உறுதிமொழி எடுக்க வைக்க முயலவில்லை? காரணம் என்ன? பெண்கள் கிடைக்காத பல கொங்கு மாவட்டதில் உள்ள பிரதான சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கேரளா வரைக்கும் சென்று பெண் எடுத்து சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். கே.கே.சி பாலு அவர்களே, நீங்கள் ஓட்டுவது லாரி. ஆனால், உங்கள் மூளையில் செயல்படுவது உங்கள் தாத்தா காலத்து கட்ட வண்டி.
எனவே, கட்டை வண்டி சிந்தனையை மாற்றி சற்று சமூகத்தோடு ஒத்துப் போங்கள். இது நீங்கள் கற்ற கல்விக்கும், நீங்கள் செய்கிற தொழிலுக்கும், நீங்கள் சார்ந்து இருக்கிற அரசியலுக்கும் மிக மிக எதிரானது. இதனால் சமூகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எதிரான பக்கம் நின்று, உங்களை வரலாற்றின் கருப்பு பக்கத்தில் பதிவு செய்து கொள்வீர்கள் என்பதை மட்டும் பதிவு செய்கின்றோம்” என கண்டனத்தை தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்!