ஈரோடு:கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வைத்திலிங்கம், புகழேந்தி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய வைத்திலிங்கம், “எடப்பாடி பழனிசாமிக்கு திமிரு அதிகமாகிறது.
அதைத் தொண்டர்களாகிய நீங்கள்தான் அடக்க வேண்டும். எம்.ஜி.ஆர் வகுத்த விதியை, ஜெயலலிதா கட்டிக் காத்த விதியை காலில் போட்டு மிதித்து, பத்து மாவட்டச் செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், பத்து மாவட்டச் செயலாளர்கள் வழி மொழிய வேண்டும், 5 வருடம் கட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்றெல்லாம் திருத்தத்தைக் கொண்டு வந்து, பொதுச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொண்டர்கள் ஏற்கவில்லை. அவருடைய அடிமைகள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். என்னையும், மனோஜ் பாண்டியனையும் சட்டமன்றத்தில் செங்கோட்டையன் இருக்க விடமாட்டார். செங்கோட்டையன் தேநீர் அருந்த அழைத்துச் சென்று, எடப்பாடி பழனிசாமியை ஒழித்தே தீர வேண்டும் என்றும், என்னிடம் நிறைய மாவட்டச் செயலாளர் ஆதரவு தர உள்ளனர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் எனவும் கூறுவார்.
ஆனால், செங்கோட்டையன் திடீரென பல்டி அடித்து ஒரு இரவில் எடப்பாடி பழனிசாமி உடன் ஓடிவிட்டார். செங்கோட்டையன் மூத்த நிர்வாகி. நாங்கள் மதிக்கக்கூடிய ஒரு நபர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகின்ற நேரத்தில், செங்கோட்டையன் முதலமைச்சர் ஆவார் என்று கூட பேசிக் கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமியை விட மிகக் கேவலமான ஆளாக செங்கோட்டையன் மாறி விட்டார். உங்களை (பொதுமக்கள்) ஏமாற்றி கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்று வந்தார். இனி, கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் செங்கோட்டையன் வெற்றி பெறுவது என்பது குதிரைக் கொம்புதான் எனத் தெரிகிறது.